வரலாறு ஒரு கண்ணோட்டம்
- தேவ. பேரின்பன்
“வரலாற்றை ஒரு கலையாகப் பயில வேண்டும்" - இப்படி ஒரு கூச்சல் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. வரலாற்றைக் கலையாக பயில்வது சரியா?….. வரலாறு கலையா?….. எல்லா நுண்கலைகளும் கூட விஞ்ஞானம் தான் என்று பேசப்பட்டு என்பிக்கப்பட்டு வரும் காலமிதுஃ அப்படி இருக்கையில் வரலாற்றை கலை என்று பயிலலாமா?… வரலாற்றைப் பயில அது சரியான பாதை தானா? இவை பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியமான தொன்றாகும்.
முதலில், நாம் வரலாறு என்றால் என்ன? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவோம். வரலாறு என்பது மானுட வாழ்வின் கடந்த கால போராட்டத்தின் தொகுப்பு; நம் இன்றைய வாழ்வின் - சமூக அமைப்பின் வளர்ச்சியில் கடந்து சென்ற பரிணாம வடிங்களை காட்டும் கண்ணாடி ! மானுட சமூகத்தின் கடந்த கால வாழ்வும், போரட்டமும் - அதன் பற்பல வடிவங்களும் கலையா?… இல்லை. அவை போராட்டங்கள், உயிர் வாழ்வதற்கான குருதிப் போர்கள்! சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகள் இடையடுது மோதிக் கொண்டதின் யதார்த்த விளைவுகள். ஆள்வோருக்கும், அடிமைப்பட்டோருக்கும் நடந்த உரிமைப் போர்கள்! ஆக, முரண்பட்ட வர்க்கங்களின் வாழ்வா, சாவா என்ற போராட்டம் தான் உலக வரலாற்றின் இயக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளது. வாழ்க்கை இயங்கும் தன்மை படைத்தது. எனவே, வரலாறும் இயங்கும் தன்மை கொண்டதாகிறது. ‘இதுவரை, ஏட்டில் எழுதப்பட்ட எல்லா வரலாற்று நிகழ்ச்சிகளுமே வர்ககப் போராட்டத்தின் சரித்திரம் என்கிறது மார்க்ஸீய தத்துவம். அதாவது, சுரண்டுவோருக்கும், சுரண்டப்படுவோருக்கும் ஏற்பட்ட போராட்டம், உடைமையாளர்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஏற்பட்ட போராட்டம் என்கிறது அது. எனவே, முரண்பாடுள்ள வர்க்கங்கள் என்ற நிலை சமுதாய வாழ்வில் ஒழிக்கப்படும் வரை வரலாறு என்பது வர்க்க போராட்டமாகத்தான் இருக்கும்.
வரலாற்றின் எல்லா நிலைகளும் அதன் எச்சங்களை( Survivals) விட்டுச் சென்றுள்ளன. இந்த எச்சங்களின் மூலமாகவும், புதைப்பொருள், நினைவுச் சின்னங்கள் போன்றன மூலமாகவும், வரலாற்றை நாம் தொடர்பு படுத்திப் பார்கக முடிகிறது. சன்றாக குடும்பம் என்ற சமூக அமைப்பின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றை எடுத்துக் கொள்வோம். ஆதியில் சொத்து தாய் வழியே கணக்கிடப் படுவது. கணங்கள், குலங்கள், பலதார மணம், பல புருஷ மணம், குழு மணம் போன்ற பல நிலைகளிலிருந்து இன்றைய ஒரே புருஷ -ஒரு தார மண முறைக்கு சமூகம் வளர்ந்துள்ளதை மானுடவியல் ஆய்வு நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அதாவது சமூகத்தின் பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிகளுக்கேற்ப, குடும்பம்- அதன் ஒருமை தன்மையிலிருந்து மற்றொரு தன்மைக்கு பரிணாமப்பட்டு வளர்ந்து வந்துள்ளதை நாம் மிகத் தெளிவாகக் காணலாம். அதன் மூலமாக, நாம் - நமது இன்றைய வாழ்வின் பண்பாட்டு. கலாச்சார சிந்தனைகளை - அவற்றின் வளர்ச்சியை எளிதாக கண்டு கொள்ள முடியும்.
நேற்றைய நிகழ்ச்சிகள் இன்றைய வரலாறாக பேசப்படுகின்றன. அதேபோல, நேற்றைய நிகழ்ச்சிகளின் வளர்ச்சிதான் இன்றைய நிகழ்ச்சி; இன்றைய நிகழ்ச்சிகளின் வளர்ச்சி தான் நாளைய நிகழ்ச்சி என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். நிகழ்ச்சிகள் வாழ்வின் இயக்கங்கள்.! இந்த நிகழ்ச்சிகளின் தானாகவா நிகழ்கின்றன?.. அப்படி ஒன்றும் நிச்சயமாகக் கிடையாது. மனிதர்கள் நிகழ்ச்சிகளை வழி நடத்ததுகிறார்கள். அவர்களின் வாழ்வுச்சிக்கல்கள் - போராட்டம் - வழி நடத்துகின்றன. ஆகவே, வரலாறு என்பது கடந்த கால வாழ்வின் அனுபவ முத்திரைதான்! இதை எப்படி நாம் கலை என்று சொல்ல முடியும்?..
இனி வரலாறு சொல்லப்படும் முறைப் பற்றி சிறிது சிந்தித்துப் பார்ப்போம்! அதாவது, வரலாற்றைப் பார்க்கும் பயிலும், வகை முறைப் பற்றி சிந்திப்போம். வரலாற்றுப் பாடம் என்றாலே பிறந்த குழந்தைக்கு கூட வேம்பாய் கசக்கிறது. ஏதோ விழுங்கக் கூடாததை விழுங்குவது போலவே அதை மாணவன் பயில்கிறான். பயில்விக்கப்படுகிறான். அப்படியானால், வரலாறு என்பதின் ஏதாவது கோளாரு..! வரலாற்றில் கோளாறில்லை. வரலாற்றைச் சொல்கிறார்களே - அந்த அறிஞர்களிடத்திலே தான் முழுக்கோளாறும் உள்ளது. அவர்கள் செய்த – செய்யும் தவறு - வரலாற்றின் மீது நல்ல எண்ணமே தோன்ற விடாமல் செய்து விட்டது. வேறு ஒன்றுமில்லை! வரலாற்றுக்கும், வாழ்வுக்கும் உள்ள தொடர்பை அறிய விடாமல் - வரலாற்றைச் சொல்லும் முறையில் கோளாறு செய்து விட்டார்கள். அவ்வளவு தான்.
வரலாறு என்றால் கி.பி., கி.மு, நூற்றாண்டு புள்ளி விவரக்கணக்கும், ஏதோ சில கிரீடம் தாங்கிய பேரரசர்களின் மரம் நட்டு சாலை போட்ட தொண்டையும் மட்டுமே எழுதி, எழுதி வரலாற்றை இவர்கள் சிறுமைப்படுத்திவிட்டார்கள். வரலாறு என்பதை வாழ்வின் பரிணாம வளர்ச்சி என்று பார்க்காமல், கலை என்று மயங்கியதன் விளைவே இது. அப்படியானால் வரலாற்றை எப்படித்தான் பயில்வது?.. வரலாற்ற அதன் இயல்புப்படி முழுமையாகப் பார்க்க வேண்டும். வரலாறு என்பது, மனித சமூகத்தின் வாழ்க்கை என்ற எண்ணத்தில் பார்க்க வேண்டும். வாழ்வுக்கு ஒரு பரிணாமத்தன்மை உண்டு. அதன்படியே சமூக அமைப்பும். மனித வாழ்வும். அதன் சிந்தனைகளும் மாறின. மாறுகின்றன என்ற உண்மையின் அடிப்படையில் பூரணமாக வரலாற்றபப் பயிலும் முறைதான் 'விஞ்ஞானப் பூர்வமாக' வரலாற்றைப் பயிலுதல் ஆகும். இது ஒன்று தான் வரலாற்றை முழுமையாக பார்க்க வைக்கும் தன்மை உடையதாக உள்ளது. வெறும் ஆண்டுகளின் புள்ளி விவரத்தையும், கிடைத்த செய்திகளையும், கடந்த கால வாழ்க்கை விட்டுச் சென்ற எச்சங்களையும் (survivals) எதோ அறிக்கை சமர்பிப்பது போல எழதி வெளியிடுதல் வரலாற்றை முழுமையாக சொல்லிவிட்டதாக ஆகாது. அந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு வாழ்வோடு அதை தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். சமூக வடிவங்கள் வளர்ந்து வந்ததின் தன்மைகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். மனித வரலாற்றின் பரிணாமத் தன்மைகளை தெளிவாக அதன் மூலம் விளக்க முற்படுதல் வேண்டும்.
வரலாறு என்பது அது நடக்கும் காலத்தின் ஒவ்வொரு சாதாரண மனிதனிடத்திலிருந்தும் உருவானதென்பமத சரியாக விளக்க வேண்டும். அப்போது மட்டுமே வரலாறு சொல்லும் முறை முழுமையடையும். வெறுமனே, வரலாற்று செய்தி அறிக்கை சலிப்புத் தட்டக் கூடியது மட்டுமல்ல; வரலாறு என்பது இந்த மாதிரி புள்ளி விவர கணக்கு புத்தகம் தானா என சந்தேகப் படக்கூடிய அளவுக்கு வரலாற்றை அது தாழ்த்திவிட வாய்ப்புண்டு. கிடைக்கும் ஆதாரப் பூர்வமான செய்திகளை பயன்படுத்தி வரலாற்றை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொள்ளுவதால் மட்டுமே, வாழ்வுக்கும், வரலாற்றுக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்பை நாம் அறிய முடியும். வரலாற்றின் முக்கியத்துவம் நம் எண்ணத்தில் பதியும். வரலாற்றைப் பயிலுதல் என்பது எதோ வேலையற்ற சோம்பேறிகள் மட்டுமே செய்யக் கூடிய வேலை என்னும் சிறுமையான – மிக அற்பத்தனமான எண்ணம் மறைந்து விடும்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
சில உதாரணங்களோடு, இந்த விஞ்ஞான ரீதியாக வரலாற்றைப் பயில்வதை புரிந்து கொள்வோம்.
கடுமையான உழைப்பும், விஞ்ஞான வளர்ச்சியும் மட்டும் வரலாற்றை உந்தித்தள்ளுவதில்லை. அவற்றோடு அதனால் ஏற்படும் உற்பத்தி உறவுகளால் வரலாறு நகர்த்தப்படுகிறது. ஆம், வாழ்வை பாதிப்பதை அந்த உற்பத்தி உறவுகள் தான். அவற்றில் ஏற்படும் முரண்பாடுகளே வாழ்க்கைப் போராட்டம். பழைய பொதுவுடமை சமூக அமைப்பிலிருந்து. ஆண்டை - அடிமை சமுதாய நிலப்பிரத்துவமும் பரிணாமப்பட்டு பட்டறை உற்பத்தி முறை போல் பெருவீதி உற்பத்தி வந்ததும், முதலாளித்துவ அமைப்பும் பிறந்ததை வரலாறு நமக்கு தெளிவாக காட்டுகிறது. பிளாட்டோவின் நூல்களில் இருந்து, அவன் காலத்தில் ஆளும் வர்க்கத்தை ஆண்டைகள் என்று அழைக்கப்பட்டதைக காண்கிறோம். அன்றைய கிரேக்க சமூகத்தில் ஆண்டைகளுக்கும்- அவர்களின் அடிமைகளுக்கும் பெருத்த பல போராட்டங்கள் நடைப்பெறுவதைக் காண்கிறோம். அதே போல, பிரெஞ்சுப் புரட்சி அந்த தேசத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பை உடைத்து எறிந்ததையும், இங்கிலாந்து தொழிற்புரட்சி உலகமெங்கும் முதலாளித்துவ சமூகத்தையும், காலனி ஆதிக்கத்தையும் தோற்றுவித்ததையும் நாம் அறிவோம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ரஷ்யநாடு முதலாளித்துவ சமூக உற்பத்தி முறையை துடைத்து வழித்து எடுத்து அதற்கு பதிலாக சோசலிச உற்பத்தி முறையில் புகுந்தது. ஆகவே, வரலாறு என்பது, கடுமையான உழைப்பு, விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆகியவற்றோடு உற்பத்தி நிலைகளில் ஏற்படும் உறவுகளால் உந்திதள்ளப் படுகிறது என்பதை அறிகிறோம்.
காசுகள் தோன்றிய போது, அதாவது, பழைய குலவழி வந்த பண்டமாற்று மாறி, அதற்கு பதிலாய் காசுகளை - மனிதன் கண்டுபிடித்தப் போது ஒரு புதிய வர்க்கம் சமூகத் தட்டுகளில் தோன்றுவதை நாம் காண்கிறோம். வியாபாரிகள் என்ற உற்பத்தியில் துளியும் பங்கு கொள்ளாத ஆகுல், உற்பத்தியான பண்டங்களை உபயோகிப்பவரிடம் சேர்ப்பிக்கும் நிர்வாகப் பணியை மட்டும் நடத்தும் புதிய வர்க்கம் தோன்றியது. இதையெல்லாம் நாம் வரலாற்றின் நிகழ்ச்சிகளை விஞ்ஞான்ப பூர்வமாக ஆய்ந்து பயில்வதன் மூலமாக அறிந்து கொள்கிறோம்.
சரி! உள்ளூர் விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் வரலாற்றுச் சின்னங்கள் சிதைபட்டு சிதறிப்போய் உள்ளதே. இதில் எப்படி விஞ்ஞானப் பூர்வமாக வரலாற்றை விளக்குவது?… சரியான கேள்வி தான்!. தமிழ்நாட்டு வரலாற்றைப் பொருத்த மட்டில் இதை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் கிடைத்த – கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு வரலாற்றை நாம் ஓரளவுக்கு சொல்ல முடியும்.
நடுகல் வழிபாட்டை எடுத்துக் கொள்வோமே!? நடுகல் வழிபாடு பற்றி நமது இலக்கிய இலக்கணங்களும், நாடெங்கும் பரந்து கிடக்கும் நடுகற்களும் கூறும். அதன் இன்றைய வடிவங்களும், மேற்குறிப்பிட்டவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நடுகல்மரபு சிறுதெய்வ வழிபாடாக மலர்ந்த பரிணாமத் தன்மை வெளிப்படும். வெறுமனே நடுகற்களின் கால ஆய்வும், நடுகற்செய்திகளும் சொல்லுவதால் மட்டும் வரலாறு பூர்த்தியானதாகி விடாது. அந்த செய்திகளை, வாழ்வோடு பொருத்தி பூரணப்படுத்தி பார்க்க வேண்டும். அப்போது தெரியும்; சிறு தெய்வ வழிபாட்டின் மூலகாரணம்.
ஆகவே, வரலாற்றியலை நாம் சொல்லும் முறையை, பயிலும் முறையை செப்பினட வேண்டும். விஞ்ஞானப் பூர்வமாக வரலாற்றினைப் பார்க்க, பயில கற்றல் வேண்டும். அது ஒன்று தான் வரலாற்றை முழுமையாக்கும், வரலாற்றை அர்த்தமுள்ளதாக்கும்.
முடிவாக, ஒன்று படுத்திச் சொல்வோம். விஞ்ஞானம் என்பது உண்மைகளைப் பற்றி உண்மையிலே ஆராய்தலாகும். அந்த வகையில், வரலாறு என்பது மானுட வாழ்வின் இயக்க வெளிப்பாடு எனக் கண்டோம். மானுட வாழ்வு உண்மையானது. உயிரோட்டமுடையது. எனவே, அதனை ஆராய்தலும் ஒரு வகை விஞ்ஞானம் தான் வரலாறு என்பது விஞ்ஞானத்தின் ஒரு துறைதான்!
இதற்கிடையில், என் எதிரே வந்த பையன் கேட்டான். சரி ஐயா! இப்படி வரலாற்றைப் பயில்வதால் என்ன லாபம்?
என்ன லாபமா?….
நினைக்க சிரிப்பு தான் வந்தது.
அனுபவத்தைவிட சிறந்த ஆசான் யாரும் கிடையாது. அந்த வாழ்வனுபங்களின் பெட்டகமாக வரலாற்றியல் திகழ்கிறது. அதன் மூலமாக நாம் மேலும் மேலும் கற்றுக் கொள்ள முடியும். அங்கே தெரியும் போராட்டங்கள் மூலமாக நமது பதையில் நாம் உறுதியுடன் மேலும் மேலும் வீரமுடனும், அதிக விவேகத்துடனும் முன்னேற முடியும். அதனால் இன்றைய வரலாற்றை நாம் சரியாகப் படைக்க முடியும். கூடவே, நாளைய வாழ்வின் இமைப்புகளை மிகுந்த தீர்க்கதரிசனத்துடனும், தெளிவுடனும் தொடமுடியும். மீண்டும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வரலாறு ஒரு கலையல்ல! அதைப் பயிலுதல் ஒரு விஞ்ஞானம்! வரலாறு வேறு ஒன்றுமில்லை, வாழ்க்கைதான்.
04.12.1971
0 Comments